தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்?

தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்?

மொழி தான் ஒருவருடைய அடையாளமாகும். தத்தம் மொழியில் பெயரை வைத்துக்கொள்வது என்பது அடையாளப்படுத்துவதற்கு உதவும்.
இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன தவறு?
இன்னொரு மொழியில் பெயர் வைப்பது என்பது, ‘ஒருவர் தம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாகக் கருதும்போது’ மட்டுமே நிகழும்.
இன்னொரு மொழி நம்முடைய மொழியை விட உயர்வானது என்று கருதக் கூடாதா?
இன்னொரு மொழியைச் சிறப்பாகக் கருதலாமே தவிர நம்முடைய மொழியை விட உயர்வானது எனக் கருதுவது கூடாது. ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் சில தனிச் சிறப்புகள் உள்ளன. எ.கா. தமிழில் ல,ள,ழ, என்றும் ர,ற என்றும் ன,ண,ந என்றும் அமைந்திருப்பதை உலக மொழிகள் வேறு எவற்றிலும் காண முடியாது. அதே போலப் பிற்கால ஒலிகளாகிய ‘எப்’ (‘F’) போன்ற ஒலியைத் தமிழ் முதலிய செம்மொழிகளில் காண முடியாது. ஆகவே ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.
நம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாக எண்ணும் ஒருவர், இயல்பாகவே தம்முடைய மொழியையும் அதன் வழியே தம்முடைய இனத்தையும் தாழ்வாகக் கருதுபவராக அமைந்துவிடுவார். இப்படி உருவாகும் தாழ்வு மனப்பான்மை அவருடைய வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்துவிடும்.
அது சரி, அப்படியானால் உயர்வான மொழி என்று எதைக் கருதலாம்?
அவரவர்க்கு அவரவர் தாய்மொழியே உயர்வானது. நரிக்குறவர் இனத்திற்கு அவருடைய தாய்மொழியான வக்கிரபோலி உயர்வான மொழியே தவிர, தமிழோ ஆங்கிலமோ இல்லை. ஒவ்வொருவரும் தத்தம் தாய்மொழியின் வாயிலாகவே தங்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள்.
சான்று: நீங்கள் தமிழராகப் பிறந்து தமிழராக வாழ்வதால் தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாடு உங்களுடையது என்று உணர்கிறீர்கள் இல்லையா? தமிழ்நாட்டிலேயே பிறந்து வளரும் ஓர் ஆங்கிலேயரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாட்டை அறிந்திருப்பாரேயன்றி அது தம்முடையது என்று உணரவோ அதைப் பின்பற்றவோ மாட்டார். அதே நேரம் வெளிநாட்டிலேயே பிறந்து வளரும் ஒரு தமிழர் இப்பண்பாட்டைத் தம்முடையது என்றும் அதன் படி வாழ வேண்டும் என்றும் எண்ணுவார்.
இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன சிக்கல்?
இன்னொரு மொழியில் பெயர் வைக்கும் போது பல நேரங்களில் அப்பெயர்களின் பொருளே தெரியாமல் வைத்து விடுவோம்.
அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க. சியாமளா என்பதன் பொருள் கறுப்பாயி என்பதாகும். கறுப்பாயி எனத் தமிழில் பெயர் வைக்கத் தயங்கும் ஒருவர் இன்னொரு மொழியில் ‘சியாமளா’ என்று பெயர் வைப்பதை விரும்புவது நகைப்புக்குரியது அல்லவா? ‘கனவு’ எனப் பெயர் வைக்கத் தயங்கும் நாம் ‘சுவப்னா’ என்று அதே பொருள் தரும் பெயரை வேறு மொழியில் வைப்பது அடிமை மனப்பான்மையே அன்றி வேறென்ன?
சில நேரங்களில் நம்முடைய குடும்பப் பெரியவர்களே அப்பெயர்களைச் சொல்லத் தடுமாறுவார்கள். நம்முடைய குழந்தைகளின் பெயரை நம் இல்லப் பெரியவர்களே சொல்லத் தடுமாறுவது நன்றாக இருக்குமா?
அதற்காக, ‘ஞான பிரகாசு’ என்னும் பெயரைத் தமிழாக்கி ‘அறிவு வெளிச்சம்’ என்று வைக்கச்சொல்கிறீர்களா?
நீங்கள் ‘ஞான பிரகாசு’ என்று இன்னொரு மொழியில் பெயர் வைப்பதற்குக் காரணமே அப்பெயர் ஒயிலாக இருப்பதாக எண்ணும் சிந்தனைதான்! ‘ஞான பிரகாசு’ என்று உங்களுக்கு ஒயிலாகத் தெரியும் இந்தப் பெயரை ஓர் அமெரிக்கரிடமோ செருமானியரிடமோ சொல்லிப் பாருங்கள். அவர்களுக்கு இந்தப் பெயர் பெருமைப்படும் பெயராகவோ ஒயிலாகவோ தெரியாதது மட்டுமில்லை, வாயில் கூட நுழையாது. உங்களுடைய அதே சிந்தனை ஏன் ஓர் அமெரிக்கருக்கோ செருமானியருக்கோ வரவில்லை? ஏனென்றால் நீங்கள் உங்களுடைய மொழியை விட, ‘ஞானப் பிரகாசு’ என்னும் பெயரைக் கொண்டுள்ள மொழியை உயர்வாகக் கருதும் மனப்பான்மையில் இருக்கிறீர்கள். இது தாழ்வு மனப்பான்மை தானே!
‘ஞான பிரகாசு’ என்னும் பெயரை ‘அறிவொளி’ என்று அழகு தமிழில் வைக்கலாம் அல்லவா?
அதற்காகக் கோப்பெருந்தேவி, பிசிராந்தையார், ஒளவையார் எனப் பழைய பெயர்களையா வைக்கச் சொல்கிறீர்கள்?
உங்களைத் தமிழில் பெயர் வைக்கச் சொன்னோமேயன்றிப் பழந்தமிழ்ப் பெயர்களைத் தாம் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. பழந்தமிழ்ப் பெயர்களை வைப்பது, புத்தாக்கச் சொற்களை வைப்பது, பெரிய பெயரை வைப்பது, சிறிய பெயராக வைப்பது என்பதெல்லாம் உங்களுடைய விருப்பத்தைச் சேர்ந்ததாகும்.
பழந்தமிழ்ப்பெயர்களை விடுங்கள். ‘புலிக்கட்டை’ என்று பெயர் வைப்பீர்களா? சிரிப்பு வருகிறது அல்லவா? அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஒருவரின் பெயர் தான் அது! அவருடைய பெயர் ‘Tiger Woods’. அதைத் தமிழில் சொன்னால் ‘புலிக்கட்டை’ தானே! பெயர் பழையது, புதியது என்பதெல்லாம் நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான்! எப்படிச் சிந்தித்தாலும் தாய்மொழியில் இருப்பது தான் முறையாகும்.
‘மோகன்’ என்று பெயர் வைக்கிறோம். அப்பெயரைத் தமிழில் ‘கவின்’ என்றோ ‘எழில்’ என்றோ வைக்கலாம் அல்லவா? ‘கண்ணன்’ எனப் பொருள் தரும் ‘கிருட்டினன்’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கண்ணன்’ என்றே வைக்கலாம் அல்லவா? ‘விசய்’ என்று பெயர் வைப்பதற்கு ‘வெற்றி’ என்று பெயர் வைக்கலாம் அல்லவா? ‘குமார்’ என்பதற்குக் ‘குமரன்’ என்று வைக்கலாம் அல்லவா? ‘உசா’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கதிர்’ என்று கூப்பிடலாம் அல்லவா!
சரி! என்னுடைய குழந்தைக்குத் தமிழில் பெயர் வைக்க ஆசைதான்! ஆனால் எங்கு தேடுவது?
ஏன் கவலைப்படுகிறீர்கள்? முனைவர் பா. வளன் அரசு(நெல்லை), முனைவர் மு. தெய்வநாயகம்(சென்னை), புலவர் இரா. இளங்குமரன்(திருச்சிராப்பள்ளி), முனைவர் தமிழண்ணல்(மதுரை), முனைவர் ந. அரணமுறுவல்(சென்னை) எனத் தமிழறிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை அணுகலாம். இன்னும் பல இயக்கங்கள் இருக்கின்றன. பல இணையத் தளங்கள் இருக்கின்றன. http://www.tamilkalanjiyam.com
, http://www.peyar.in, http://wapedia.mobi/ta, http://thamizppeyarkal.blogspot.com, http://tamilsaral.com/news%3Fid%3D3857.do, http://www.sillampum.com/, http://pagalavan.in/archives/328 எனப் பல தமிழ்த்தளங்களில் நீங்கள் தமிழ்ப்பெயரைத் தேர்ந்துகொள்ளலாம்.
குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் மட்டும் தானே இதைச் சொல்கிறீர்கள்?
இல்லை. குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது, வணிக நிறுவனங்களுக்குப் பெயர் வைப்பது, திரைப்படங்களுக்குப் பெயர் வைப்பது என எல்லாவற்றிற்கும் சேர்த்துத் தான் சொல்கிறோம்.
வணிக நிறுவனங்களுக்குமா?
ஆம். வெளி மாநிலத்திற்கு வந்து பிழைக்கும் தெலுங்கரான ‘உம்மிடி பங்காரு’ம் கன்னடரான ‘உடுப்பி’ உணவகத்துக்காரரும் தத்தம் மொழியிலேயே பெயர் வைக்கும்போது நாம் நம்முடைய மாநிலத்தில் இருந்துகொண்டே வணிக நிறுவனங்களுக்கு வேற்று மொழியில் பெயர் வைப்பது சரியா?
வேற்று மாநிலத்திலோ நாட்டிலோ இருக்கும்போது வணிக நிறுவனங்களுக்கு எப்படித் தமிழில் பெயர் வைப்பது?
ஒன்றும் கவலையில்லை. தமிழ்நாட்டின் தலைநகரிலேயே ‘உம்மிடி பங்காரு’ என்று தெலுங்கில் பெயர் வைத்துக் கடை நடத்தவில்லையா? ‘உடுப்பி’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் உணவகங்கள் இல்லையா? ‘அகர்வால்’ இனிப்பகங்கள் இல்லையா? ‘நாயர்’ கடைகள் இல்லையா?
திரைப்படங்களுக்குமா சொல்கிறீர்கள்? இது கருத்துரிமையில் தலையிடுவது ஆகாதா?
தமிழில் படம் எடுக்கிறார்கள். கதை தமிழர்கள் பற்றிய கதையாக இருக்கிறது. படத்தைத் தமிழகத்தில் தமிழர்களுக்குத் தான் வெளியிடுகிறார்கள். ஆக, எம்மொழியில் படம் இருக்கிறதோ, யாருக்காக எடுக்கப்படுகிறதோ அம்மொழியில் பெயர் வைப்பது தானே பொருத்தமாக இருக்கும். நாம் ஒன்றும் சப்பான் நாட்டிற்குச் சென்று தமிழில் பெயர் வையுங்கள் என்று கேட்கவில்லை.
தமிழில் பெயரை வைப்பதால் நட்டம் ஏற்படும் சூழல் வரும்போது என்ன செய்வது?
அப்படிப்பட்ட சூழல் இதுவரை வந்ததேயில்லை. எத்தனையோ ஆங்கிலப் படங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். அப்படங்களுக்குத் தமிழில் தான் பெயர் வைக்கிறார்கள். ‘300’ என்று ஓர் ஆங்கிலப் படம் வந்தது. அப்படத்திற்கு ‘300 பருத்தி வீரர்கள்’ என்று பெயர் வைத்தார்கள். பெயர் தமிழில் இருந்ததால் அப்படம் ஓடவில்லையா என்ன?
அப்படியானால் தமிழில் பெயர் வைக்க வேண்டுமா? தாய்மொழியில் பெயர் வைக்க வேண்டுமா?
அவரவர் தத்தம் தாய்மொழியிலேயே பெயர் வைக்க வேண்டும். நாம் தமிழர் அல்லவா! எனவே தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும்.
தமிழில் பெயரிடுவோம்....

தமிழீழம் அமைக்க வேண்டும் - லீ-குவான்-யு

தமிழர்கள் வாழும் பகுதிகளைத் தனியாகப் பிரித்து தமிழீழம் அமைக்க வேண்டும் – சிங்கப்பூர் தந்தை லீ-குவான்-யு

”இலங்கை அதிபர் மகிந்த இராசபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி-அவரைத் திருத்தவே முடியாது” என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யு கூறியிருக்கிறார்.

‘லீ குவான் யு உடனான உரையாடல்கள்’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள நூலில் இவ்வாறு கூறியுள்ளார். அந்த நூலில் இலங்கை இனச்சிக்கல் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் லீ குவான் யு விரிவாக விளக்கியுள்ளார்.

”இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர். தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது” என்று லீ குவான் யு கூறியுள்ளார்.

”இதன் மூலம் தமிழர்கள் வாழும் பகுதிகளைத் தனியாகப் பிரித்து தமிழீழம் அமைக்க வேண்டும். அதுதான் இலங்கை இனச்சிக்கலுக்குச் சிறந்த தீர்வாக இருக்கும்” என்ற கருத்தையும் லீ குவான் யு ஆதரித்திருக்கிறார்.

இலங்கைப் போரில் விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், ”இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடிவந்த விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டு விட்டனர். இதன் மூலம் இலங்கை இனச்சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் மகிந்தா இராசபக்சே கூறிவருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்க மாட்டார்கள். சிங்களர்களுக்குப் பயந்து ஓடிவிடவும் மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

ராஜபக்சேவைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், ”இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேச்சுகளை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி, இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ என்னால் முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.

87 வயதாகும் லீ குவான் யு, சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படுபவர். 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று அந்த நாட்டின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

அதற்கு முன்பு வரை மலேசியாவுடன் இணைந்து இருந்த சிங்கப்பூரைத் தனி நாடாக அறிவித்தவர் இவர் தான். 1990ஆம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் இவர் பிரதமராக இருந்தார். அதன் பின்னர் கோசோக் டாங்கை பிரதமராக்கிய இவர் அவரது அமைச்சரவையில் மூத்த அமைச்சராகப் பணியாற்றினார்.

2004ஆம் ஆண்டில் இவரது மகன் ‘லீ சியான் லூங் பிரதமரானார். அப்போதிலிருந்து இவர் சிங்கப்பூர் அமைச்சரவையின் காப்பாளராகப் பதவி வகித்து வருகிறார். உலகம் முழுவதும் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் இவர், ஈழத் தமிழர் நலனிலும் அக்கறை கொண்டவராவார்

Therotam-Page 1


Therotam-Page 2


Therotam-Page 3


Therotam-Page 4